Monday, January 6, 2020

#லக்னம்

ஒரு குழந்தை பிறந்த நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த இடம், வானத்தை எதிர் நோக்கி இருக்கும் பகுதிதான் அந்தக் குழந்தையின் லக்னம் ஆகும்.
சூரிய உதயத்தைப் பொறுத்து ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தைக் கட்டுப்படுத்தும் ராசி. ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த இடத்தைக்கட்டுப் படுத்தும் ராசிதான் லக்னம்.
ஜென்ம லக்னம் என்பது ஒருவர் பிறக்கும்போது சூரியன் எந்த ராசி மண்டலத்தில் விஜயம் செய்து வந்தாரோ அந்த ராசி மண்டலம் லக்னமாக அமையும். ராசி என்பது சந்திரன் எந்த ராசி மண்டலத்தில் ஒருவர் பிறக்கும்போது விஜயம் செய்து கொண்டு இருந்தாரோ அதை வைத்து ராசியை குறிக்கிறார்கள்.
லக்னத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்றால் இதை வைத்துதான் ஒரு ஜாதகத்தின் அடிப்படை பலனை அறிய முடியும். லக்னம் என்றால் முதல் வீடு. இதில் இருந்து பன்னிரண்டு வீடுகளும் ஒருவர் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை கணிக்க பயன்படுகிறது.
பன்னிரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீடும் வாழ்கையின் ஒவ்வொரு துறையை தீர்மானிக்கிறது.
ஜாதகத்தில் எதாவது ஒரு ராசி கட்டத்திற்குள் “ல” என்று எழுதி இருப்பார்கள். அதுவே அந்த ஜாதகரின் லக்னமாகும். லக்னங்களின் பொது பலன்கள் :-
மேஷ லக்னம்:-
இராசி மண்டலத்தின் முதலாவது ராசி மேஷம். இது சர ராசியாகும். மற்றவர்களை எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய தன்மை மேஷ லக்னத்தாருக்கு உண்டு. அதுவே அவர்களது பலமாகும். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றத்தை உடையவர்கள். முன்கோபமும், பிடிவாதமும் அதிகமாக காணப்படும்.கூரிய புத்தியுடைய அறிவாளி நல்ல பெயர் சேர்க்கக்கூடியவர். அடர்த்தியான புருவங்களைக் கொண்டவர்கள்,தைரியம் மிக்கவர்.
விவேகமும், அறிவும், துணிவும், நம்பிக்கையும் உள்ளவர்கள் .எப்போதுமே மற்றவர்களை அதிகாரம் செய்யக்கூடிய லட்சியத்தைக் கொண்டவர்.மற்றவர்களுக்கு ஆணையிட்டு, நிர்வகித்திடும் பணிக்கு பொறுத்தமானவர். தசைப்பற்றுடைய உடல்வாக்கு கொண்டவர்கள் . விரைவாக செயல்படக்கூடியவர்கள் கர்வமானவர்கள் சுயகௌரவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் தருபவர்கள். மற்றவர்களின் திறமையை, குறைத்து மதிப்பிடுபவர்கள். இது உக்ரமான ராசியாதலால்,எப்போதுமே, புதிய கருத்துக்களையும் யோசனைகளையும் மனதில் கொண்டவர்கள். இதற்கு செவ்வாயின் ஆதிபத்தியம் இருப்பதால்,சிறிய காயங்கள் மற்றும் பெறும் விபத்துக்கள் ஏற்படாமல் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
ரிஷப லக்னம்:-
ரிஷபம், நிலம் சார்ந்த நிலையான, இரண்டாவது மற்றும் ஸ்திர ராசியாகும். புத்தி சாமார்த்தியம் உள்ளவராக இருப்பார்கள். நிகரற்ற ஞாபக சக்தியுடையவர்கள். பிறர் மீது அதிகாரம் செலுத்தவும் விரும்ப மாட்டார்கள். இதற்கு அதிபதி சுக்ரன் எனவே இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல சிவந்த மேனியும், அகலமான தோள்களும், கரிய கண்களும், சுருட்டை முடியுடன் இருக்கலாம். ராஜ தந்திரம் படைத்தவர்கள். இவர்களின் மனதைப் புரிந்து கொள்வது, அவ்வளவு எளிதல்ல. கலையில் ஆர்வம் கொண்டவர்கள். கலைசார்ந்த முயற்சிகளில் மிகப் பிரமாத வெற்றி காண்பார்கள். எப்போதும் கூடுமானவரையில் மன நிம்மதியுடன் வாழ்வார்கள்.
இந்த லக்னத்திற்கு குரு, சந்திரன், சுக்கிரன் பாவிகள். சனி பகவான் ராஜயோகம் தருபவர். சனி திசை நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உற்றார், உறவினர்களிடம் இருந்து சில நேரம் பிரிந்து வாழ நேரிடும். நல்ல வாழ்க்கை துணை அமைந்துவிட்டால் இவர்களது வாழ்வு சிறக்கும். பெரும்பாலும் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் கலைத்துறையில் ஈடுபட்டிருப்பார்கள்.
மிதுன லக்னம்:-
மிதுன லக்னம் உபய ராசியாகும்.எப்போதும் நல்ல சுறுசுறுப்பும் வேலை செய்யும் நாட்டமும் உள்ளவராக இருப்பார்கள். புத்தி சாதுர்யத்தை நல்லபடி பயன்படுத்திக் கொண்டால் அரிய பெரிய காரியங்களைச் சாதிக்கலாம். பிடிக்காதவரிடத்தில் நெருங்க மாட்டார்கள். சாதுர்ய பேச்சு உடையவர்கள். பல வழித்துறைகளில் பணத்தைச் சம்பாதிக்கும் சாதுர்யமுடையவர்கள்.ஆகையால் கையில் சதாகாலமும் பணம் இருந்தே தீரும். உடன் பிறந்தோர்களால் ஆதரவும் பண உதவியும் நல்லபடி அமைந்தாலும் வெகு சீக்கிரத்தில் மன வேற்றுமையும் விரோதமும் யாவரும் அதிசயிக்கும் படி ஏற்படும். ஒரே மூச்சில் யந்திரத்தைப்போல் உழைக்கும் பணி இவர்களுக்கு ஏற்றது.
கணக்கு பரிசீலனை போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். எவ்வளவு பெரிதான அல்லது சிறிதான வேலையில் ஈடுபட்டவராயினும் வேறோர் வேலையிலும் கண்ணோட்டமுள்ளவராகவே காணப்படுவார்கள். ஒரு கல் எறிந்தால் இரண்டு மாங்கனி விழ வேண்டும் என்பது இவர்களது கொள்கை.
கடக லக்னம்:-
கடக லக்னம் ராசி மண்டலத்தில் நீர் சார்ந்த ராசி. இந்த லக்னம் சந்திரனின் ஆட்சி பெற்ற வீடாகும். சந்திரன் மனம், உடலுக்கு அதிபதி ஆகையால் இவர்களுடைய மனமும், உடலும் தூய்மையானதாக இருக்கும். மனதில் அன்பு நிறைந்தவர்கள். அழகான உடலமைப்பும், வசியமான பேச்சையும் கொண்டவர்கள். புதிய சரித்திர சாதனையை செய்ய வேண்டும் என்ற பெரும் லட்சியம் கொண்டவர்கள். நல்ல அறிவாற்றல், புத்தி கூர்மை உடையவர்கள். இந்த லக்னம் பெரிய ஆசைகளை உள்ளடக்கியது.
ஆன்மீக மகான் "ஆதி சங்கரர்" இந்த லக்னத்தில் பிறந்தவர் தான்.
மருத்துவம், ஆன்மீகம், சினிமா போன்ற துறைகளில் சாதித்தவர்கள் பெரும்பாலும் கடக லக்னத்தில் பிறந்தவர்களே !!
இவர்கள் தந்தை சொல்லுக்கு அதிகமாக மதிப்பு கொடுக்க மாட்டார்கள். இதனால் இவர்களுக்கு கெட்ட பெயர் உண்டாகலாம். கடக லக்னத்திற்கு 7 ஆம் பாவம் சனியாக வருவதால் கணவன்/மனைவியால் பிரச்சனைகள் வரும் (அ) பிரிந்து விடுவார்கள். இந்த லக்னத்திற்கு செவ்வாயும், குருவும் சுப கிரகங்கள்.
சிம்ம லக்னம்:-
ராசி மண்டலத்தில் 5ஆவது மற்றும் ஸ்திர ராசி சிம்மம். இவர்களுக்கு மிகவும் எடுப்பான, கம்பீரமான மற்றும் ராஜ தோற்றம் இருக்கும். திடபுத்தி கொண்டவர்கள். பொதுவாக சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களைக் கண்டு பிறர் கொஞ்சம் தயங்கி பேசவும், மரியாதையை கொடுக்கும் விதத்தில் இருக்கும். இந்த லக்னத்தின் பெயருக்கேற்றவாறு இவர்கள் மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே விளங்குவார்கள். கோபம், பிடிவாதம், முன்கோபம் இவர்களது எதிர்மறையான குணங்கள். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். இவர்களுக்கு தீங்கு விளைவித்தவர்களை எளிதில் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டார்கள். இயல், இசை, கலை துறை, அரசியலில் ஈடுபாடு (அ) தொடர்பு கொண்டவர்கள். குடும்பத்திலும் சமுதாயத்திலும், உங்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.
துணிகரமான காரியங்களைத் தயங்காமலும், மயங்காமலும், பதறாமலும், செய்து முடிக்கும் துணிவுடையவர்கள்.
கன்னி லக்னம்:-
ராசிமண்டலத்தில் ஆறாவது இடத்தில் இருப்பது கன்னி ராசி. இது உபய ராசியாகும்.
இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு படிப்பதிலும், பலவற்றைக் கற்பதிலும், மிகுந்த விருப்பம் இருக்கும். கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். சமயப் பணிகளில் ஆர்வம் கொண்டிருப்பார்கள் . குழந்தைப் பருவத்தில், மிக மகிழ்ச்சியானவராக இருந்திருந்தாலும், இவர்களின் வாழ்க்கையின் பிற்பகுதியில், பல தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.விவரமான விளக்கங்கள் காரணமாய் இவர்களின் பேச்சு மற்றவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திடலாம். செயல்களில் சுறுசுறுப்புடனும் விரைவாகவும் இயங்குவார்கள். படித்து அறிவைப் பெருக்கிக் கொள்வதில்,இவர்களுக்கு மிகுந்த விருப்பம் இருக்கும். மனதில் இருப்பதையெல்லாம், இவர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை மனம் திறந்து பேசுவதுமில்லை
சற்று அடக்கமாகவே இருப்பார்கள். எதிலும் திறமைசாலிகளாக இருப்பார்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றலும், விவேகமும் இருக்கும். இவர்களது சாதுர்ய பேச்சால் நிறைய நண்பர்கள் கிடைக்க பெறுவார்கள். மெத்த படித்திருந்தாலும் மற்றவர்கள் தம்மை பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் இருக்கும். பிறருக்குக் கல்வி புகட்டுவது, பிற மொழிகளை கற்பதில் ஆர்வம் இருக்கும். உடன் பிறந்தவர்களிடையே அன்பும் பற்றுதலும் அதிகமுண்டு. சூழ்நிலையால் பிறிந்திருப்பினும் முக்கியமான தருணங்களில் ஒருவரை ஒருவர் கலந்து பேசாமல் இவர்களோ, இவர்களுடைய உடன் பிறப்புகளோ எந்த காரியத்திலும் ஈடுபட மாட்டார்கள். நோய் என்றால் பெரும் பயம், சிறிய வியாதியாயினும் பெரிய சிகிச்சை செய்த கொள்வார்கள். தான் கற்றதோடல்லாமல் அரிய விஷயங்களைப் பிறரும் அறிய வேண்டுமென்ற ஆசை இவர்களுக்கு என்றும் உண்டு.
பெரும்பாலும் பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள்,வழக்கறிஞர்கள் இந்த லக்னத்தில் பிறந்தவர்களே.இந்த லக்னத்திற்கு சனியும் சந்திரனும் சுபர்கள்.
துலா லக்னம்:-
ராசி மண்டலத்தில் 7 - வது ஸ்தானத்தில் இருப்பது துலாம் அதன் அதிபதி சுக்ரன். இது ஒரு சர ராசியாகும்.சுக்கிரன் லக்னாதிபதியாக இருப்பதால் இயற்கையிலே நல்ல அழகும், கவர்ச்சியான உடலமைப்பும் கொண்டவர்கள்.துலாம் என்றால் தராசு. ஒருவரை பார்த்த உடனே எடை போட்டுவிடுவார்கள். கற்பனை உலகில் சிந்தனையை செலுத்துவார்கள். பிறருக்கு உதவி செய்வதில் விருப்பம் கொண்டவர்கள். பெரும்பாலோர் வியாபாரத்துறையில் ஈடுபடுவர்கள். இந்த லக்கினகாரர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு. கடவுள் பக்தி கொண்டவர்கள். சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றுபவர்கள். சமுகப் பணியில் ஆர்வம் கொண்டவர்கள்.நேரம் தவறாதவர்கள்.
பொதுவாக இரும்பு எந்திரம், டிரான்ஸ் போர்ட், கட்டிட கான்ட்ரக்ட் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பார்கள். எக்காரியத்திலும் மிகமிக நிதானமாக ஈடுபடுவார்கள். ஆழ்ந்த ஆலோசனை செய்து முடிவுக்கு வருவார்கள். துலா லக்கினத்திற்கு புதன், சுக்கிரன்,சனி சுபர்கள்.
விருச்சிக லக்னம்:-
ராசி மண்டலத்தில் விருச்சிகம், ஏழாவது ஸ்தானத்தில் இருக்கிறது. இது ஒரு ஸ்திர ராசியாகும்.
இவர்களுக்கு ஆரோக்கியமான உடலமைப்பும், தீர்க்கமான கண்களும் இருக்கும். இவர்கள் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவர்கள். முன்கோபம் என்பது இவர்களுடனே பிறந்தது. இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் மதிப்பு, மரியாதைகளுக்கு முக்கியத்துவம கொடுப்பவர்கள். குரு இந்த லக்னத்திற்கு பூர்வபுண்ணியாதிபதி. இவர்களை எளிதில் ஏமாற்ற முடியாது. கொண்ட கொள்கையை இறுதி வரை பின்பற்றுபவர்கள். சுய சம்பாத்தியத்தில் விருப்பம் உள்ளவர்கள். இவர்களது வாழ்கையில் சுலபமான விஷயங்கள் கூட மிகுந்த போராட்டத்திற்கு பிறகே நடக்கும். பெரும்பாலும் இந்த லக்கினகாரர்களுக்கு தந்தையின் ஆதரவு கிடைப்பதில்லை. ஆதரவு குணமும், முன் கோபமும் கொண்டவர்கள். எப்போதும் கலகம் உண்டு பண்ணும் மனப்பான்மை இருக்கும்.
கொண்ட குறிக்கோளை அடையும் வரை விடா முயற்சியுடன் செயல்படுவார்கள். சகோதரர்களிடமிருந்து விலகி வாழ்வார்கள். கடுமையான உழைப்பாலும், அறிவாற்றல் திறனாலும், செய்யும் தொழிலில் முன்னேறுவார்கள்.
இவர்களுக்கு தொழில் ஸ்தானமாக சிம்மம் வருவதால் தந்தையின் பிசினஸ், அல்லது அதிகாரம் உள்ள அரசாங்க வேலை பார்ப்பார்கள்.
விருச்சிக லக்கினத்திற்கு சூரியனும், சந்திரனும் சுபர்கள்.
தனுசு லக்னம்:-
ராசி அமண்டலத்தில் 9வது ஸ்தானத்தில் உள்ளது, இது ஒரு உபய ராசியாகும். அதிபதி குரு.
இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் கொடை, ஈகை, தயை உள்ளம் கொண்டவர்கள். நல்ல ஒழுக்கமுடையவர்கள். ஒரு நல்ல மனிதாபிமானி. இவர்களது இளகிய மனதால் அனைவராலும் நேசிக்கபடுவார்கள். படித்தவர்களையும், பெரியோர்களையும், மதித்து மரியாதை செலுத்துவார்கள். இவர்களுடைய ஆதரவைக் கொண்டு, இவர்களின் உடன் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளப்பாடுபடுவார்கள்.
உறவுகள் தீயவரென்றால் உறவை துண்டித்து கொள்வார்கள். அதிகம் உயரமாக இருக்கமாட்டார்கள். நல்ல இனிமையான குரல் வளம் கொண்டிருப்பார்கள்.வேதாந்தத்திலும், மதம் சம்பந்தப்பட்ட புத்தகங்களிலும், இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். அமைதியான தோற்றமுடையவர்கள், எப்போதுமே சிரித்த முகத்துடன், பகட்டு எதுவுமின்றி இருப்பவர்கள். எந்த ஒரு விசயத்தையும் சீர் தூக்கி பார்த்து முடிவு எடுப்பார்கள். கடவுளிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள்.கஷ்டங்கள் எதிர்ப்புகள், வீண் வம்பு வழக்குகள் வாழ்க்கையில் குறுக்கிட்ட போதிலும், அவைகளை இயல்பாக ஏற்றுக் கொண்டு முன்னேற்றப் பாதையில் எதிர்நோக்கிச்செல்வார்கள். தர்ம சிந்தனையுடையவர்கள்.
பலர் இவர்களுடைய உதவியையும் ஆலோசனையையும் நாடிப் பயனடையும் அளவிற்கு வித்தராக இருப்பார்கள்.தொழில் சம்பந்தமாக அயல்நாட்டுப் பிரயாணங்களில் அடிக்கடி ஈடுபடுவார்கள்.நல்ல உழைப்பாளியான இவர்களுக்கு சோம்பல் அறவே புடிக்காது. ஆனால் இவர்களின் கோபத்தில் தோன்றும் வார்த்தைகளின் கடுமை எதிரிகளை சுட்டெரிக்கும் போன்று அமையும்.
இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் சற்று தாமதமாகலாம். ஒருசில குழந்தைகளே இருக்கும். சிறு வயதில் பிணி ,கண்டங்கள் தோன்றலாம். எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசுபவர்களாதலால் இவர்களிடத்தில் எந்த ரகசியமும் நிற்காது. கேட்பவர்கள் மனதில் நன்றாக பதியுமளவுக்கு சொன்னதையே மீண்டும் மீண்டும் வற்புறுத்திப் பேசுவார்கள். சுவாமி விவேகனந்தர் இந்த லக்கினத்தில் பிறந்தவர் தான் !!!
மகர லக்னம்:-
ராசி மண்டலத்தில் உள்ள பத்தாவது சர ராசி.
இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தந்திரமானவர் சாமர்த்தியசாலி புத்திசாலி.கலைகளில் ஆர்வமிக்கவர்கள். கலைசார்ந்த வழிகளில் நீங்கள் வெற்றி காண்பார்கள். மெலிந்த உடல் அமைப்பு கொண்டிருப்பார்கள். திட புத்தியும் பல வழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறனும் உள்ளவர்கள். சுய நலம் மிக்க காரியவாதிகள். ஏதாவது ஆராக்கிய பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் தனிமையையும் அமைதியான வாழ்க்கையையும் விரும்புவார்கள். பிடிவாத குணமுடையவர்கள். ஊக்கம் குறையாமலும் நம்பிக்கை இழக்காமலும் எடுத்த காரியத்தை தொடர்ந்து முடிப்பார்கள். உடன் பிறந்தோரிடத்தில் உள்ளன்பு இருப்பினும் பாசத்தை வெளிப்படுத்த மாட்டார்கள்.
கல்வியில் தேர்ச்சி பெற்று உயர்தர கல்வி சிறப்பையும் அடைந்து எடுத்த எடுப்பிலேயே நல்ல உத்தியோகப் பதவியில் அமரும் பாக்கியம் பூர்வ புண்ணிய வசத்தால் ஏற்படும். இவர்களுக்கு மதப்பற்றைவிட கலைப்பற்றில் அதிக நாட்டம் ஏற்படும்.
கும்ப லக்னம்:-
ராசி மண்டலத்தில் பதினோராவது ஸ்திர ராசி. இதன் அதிபதி சனி.
இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் பிறருடன் அன்பாகவும், பெருந்தன்மையுடனும் பழகுவார்கள். நம்பிக்கை மற்றும் நட்புக்கு பாத்திரமானவர்கள். அதிக நினைவாற்றல் உள்ளவர்கள். உள்ளத்தில் தோன்றிதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துவார்கள். சிலர் குடும்ப பொறுப்பை சிறு வயதிலே ஏற்பார்கள். வாழ்க்கை வசதி நன்கு அமையும். இவர்கள் ஒரு தத்துவஞானி எந்த ஒரு விஷயத்தையும், துருவிப்பார்த்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள்.
வாழ்க்கையில் பல ஏற்றதாழ்வுகளை இவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். பெண்களுக்கு கும்ப லக்னம் உகந்தது. இந்த லக்னத்தில் பிறந்த பெண் ஒருவருக்கு வாழ்க்கை துணைவியாக கிடைக்க பெற்றால் வாழ்வு சிறக்கும்.
பழைய சம்பிரதாயங்களில் ஆர்வம் காட்டாது சமூகசீர்திருத்த கொள்கையில் நாட்டம் கொண்டவர்கள். இவர்கள் எதையும் விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி செய்து விளக்கம் காண்பவர்கள். எதையும் ஆழ்ந்து நோக்கும் தன்மையும் தீர ஆலோசித்து செயல்படும் தன்மை உண்டு. கும்ப லக்னத்தில் தோன்றியவர்கள் நியாயம் அநியாயம் இவற்றைத் தெளிவாக யாராக இருந்தாலும் பயமின்றி எடுத்துச் சொல்வார்கள்.
எலக்டிரிகல் என்ஜினீயரிங், மருத்துவம், கணிதம், அன்னிய பாஷைகள் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்று பட்டதாரிகளாக விளங்குவர்.
மீன லக்னம்:-
ராசி மண்டலத்தில் 12 வது வீட்டிலுள்ள மீனத்தின் அதிபதி குரு.
அழகான கண்களும் அனைவரையும் ஈர்க்ககூடிய தோற்றம் கொண்டவர்கள்.
தன்னடக்கத்துடனும் அனைவரிடமும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் மிகக் கம்பீரமான தோற்றத்தையுடையவர்கள். ஏழை எளியவர்களிடத்தில் மிகவும் இரக்க சுபாவம் கொண்டவர்கள். வெகுசீக்கிரத்தில் பிறருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாவார்கள்.தயாள குணம் நிரம்பியவர்களாகவும், திறமைசாலிகளாகவும் விளங்குவார்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் வாக்குவன்மை பெற்றவர்களாதலால் இவர்களுடன் பேச்சுக் கொடுத்து வெற்றி பெறுவது கடினம். வாய் ஓயாமல் பேசக் கூடியவர் அல்ல வெனினும் இவர்களுடன் மற்றவர்கள் பேசும்போது வெகு ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்.
இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செலவுகளைக் காட்டிலும் ஆதாயங்களே மிகுந்து காணும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாவரும் உங்களுக்கு பெரு மதிப்பும், மரியாதையும், கௌரவமும், அளிக்க்க் கூடிய அளவிற்கு சிறந்து விளங்குவதோடு பிரியமாகவும், நடந்து கொள்வார்கள்.கடவுளிடம் பக்தியுடையவர்கள் மற்றும் விருந்தோம்பல் இயல்புடையவர்கள். சமய ஈடுபாடு உடையவர்கள். எதிரிகளுக்குக்கூட உதவி செய்யக் கூடியவர்கள். கலை மற்றும் விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டவர்கள்.